Thursday, 26 June 2014

குடிமகன்

இல்லறம் இனிமையில் , 
மனம் மட்டும் ஒத்திருந்தால் போதாது 
பழக்கமும் மாற வேண்டும் !

பத்து பாத்திரம் தேய்த்து 
பெற்ற பிள்ளைகளை, 
பேணும் பேதை அவள், 
இல்லறத்தில் இன்பத்துக்கு பஞ்சமில்லை!
துணைவனும் தூர் வாருகிறான்,
துயரில்லாமல் காப்பாற்றுகிறான் !
வலி போக்கும் நிவாரிணி ,
வலிய வந்தது விளம்பரம் !
மலிவு விலையில் வந்த வினை , 
இல்லறத்தில் வேதனை !
விகல்பமில்லா ஒருவனின் ,
விதியின் சதியா
இல்லை 
மதியின் கதியா 
வீழ்ந்து கிடக்கிறான் !!!
வீதியில் தன்பதியை தவிக்கவிட்டு !!!

Wednesday, 25 June 2014

அகதிகள் !

அகதிகள் தினத்திற்காக எழுதியது !!
பரந்த உலகில் 
அனைவருக்கும் இடமுண்டு !
சிலருக்கு சொந்த நிலம் !
பலருக்கு வந்தடைந்த நிலம் !
அவர்கள் தான் அகதிகள் !!

ஆறுதல் படுத்த இயலாது 
அதனால் என் அனுதாபங்கள் !!


தாலாட்டு  பாடும் 
தாயுடன்  வாழ்ந்த நாட்கள் போய்,
தலை  கோதும் 
தந்தையுடன்  இருந்த  நாட்கள்  போய்
சமரச  படுத்தும் 
தனயனுடன்  செலவிட்ட நாட்கள்  போய்
அருமை தோழிகளுடன் 
ஆடி பாடிய காலங்கள்  போய் 
அயராது உழைத்தாலும் 
துயரமில்லா கழிந்த நாட்கள் போய் 
அகத்துக்காரரின் அன்பால் 
சுற்றம் மறந்த நாட்கள் போய் 
அன்பு ! ஆசை !
பண்பு ! பண்பாடு ! பந்தம் !
எல்லாம் மறந்து போய் 
வீட்டை விட்டு ,
ஏன் நாட்டையே விட்டு ,,
வயிற்றுப் பிழைப்புக்காக, 
நாய் படாத பாடு படும் 
நான் மட்டும் தான் அகதியா,
இல்லை நீங்களுமா ?

Monday, 23 June 2014

இழப்பின் வலி !!

நேரம் வந்தால் செல்லும் உயிர்
நீ அவசரத்தில் எடுக்கும் முடிவு 
உன் உயிரை பறிக்கலாம்!
ஆனால் உன் நினைவுகள் 
அடங்கா துயர் தரும் !
தனிமையை உணர்ந்தால் 
தாயிடம் கூறு !!
அவள் உணர்த்துவாள் 
உண்மையான அன்பை !!
தந்தையிடம் கூறு 
அவர் விவரிப்பார் 
வாழ்க்கையின் மகத்துவத்தை !!

தெரிந்தவர்களின் தற்கொலையின் பாதிப்பின் பதிப்பு இங்கே!!


பிறப்பின் வாசலில்
உன்னை வரவேற்க
பெருமிதத்துடன் உன் தந்தை,
எதிர்பார்ப்புடன் பந்துக்கள் ,
பிரார்த்தனையுடன்
உன் பிஞ்சு முகத்தை பார்க்க 
ஆனந்தக் கண்ணீருடன் உன் தாய் ,
பாரங்கள் பல இருந்தும்
உன்னை எண்ணிக்கொண்டு ,,
மனசெல்லாம் பூரிப்புடன்
உன் வளர்ச்சியை எண்ணி எண்ணி,
களிப்புடன் நீ விரும்பியவற்றை
வலி யை மட்டுமே கூலியாகக் கொடுத்து, ,
உன் விழியில் ஈரத்தை
 பார்க்கக் கூடாதென்றெண்ணும்
கடவுளுக்கு நிகரான
பெற்றவர்களை சிந்தித்து பார் ,
நீ விபரீத முடிவின்
  விளிம்பிலிருக்கும் பொழுது ,
காரணங்கள் பல கூறலாம்
வேலைப் பளு,
நண்பர்கள் பிரிவு,
காதல் முறிவு,
நீ சென்று விடுவாய் உலகை விட்டு,
உன்னை மரண வாசலுக்கு அனுப்பிவிட்டு
நிர்க்கதியாகி நித்தம்
உன் நினைவுகளுடன்,
நடைபிணமாய்
வாழப் போவது உன்னை பெற்றவர்கள் மட்டுமே !!

Saturday, 21 June 2014

இசை!

தனிமையிலும் இனிமை காண முடியும் 
இசை இருந்தால் !!
மயக்கும் இசையில் 
நம் நிலை மறக்க செய்யும் 

இசைக்கான நாள் !!


காலையில் எழுப்பும் 
சுப்ரபாதத்திலிருந்து ,
கவலையில் வருடும் 
சோக கீதங்களிலிருந்து, 
காதலில் விழுந்ததும் 
கேட்கும் பாடல்களிருந்து,
கவலையில் மூழ்கியிருக்கும் 

சாவு வீடு வரை .
இசையின் ஆதிக்கமே !
பல வாத்தியங்களுடன் 
பத்து பாத்திரத்திலும் கூட 
சங்கீதத் திறனை வெளிப்படுத்தும் 
இசையமைப்பாளர்களுக்கு இந்நாள் அர்ப்பணம் !

Monday, 16 June 2014

வரவு!!


நான் சுவாசிப்பதே 
உன்னை நேசிக்கத்தான் 
என்று காதல் மொழி பேசும் 
என்னவளின் ஏக்கமான 
வரிகள் !!

மழையின் வரவுக்காக
ஏங்கும்
நிலம் போல,
உன் வரவுக்காக
ஏங்கும்
என் விழிகளும்
வறண்டு கொண்டிருக்கிறது
எதிர்பார்ப்புகளை
கண்ணீரில் கரைத்து!
பூவரம்பின் வரவுக்காக
வாடும்
செடி  போல ,
என் மனமும்
வாடிக் கொண்டிருக்கிறது
நினைவுகளை
கனவுகளில்  சேர்த்து!
தென்றலின் வரவுக்காக
ஏங்கும்
சோலை போல,
என் இதயமும்
ஏங்கிக் கொண்டிருக்கிறது
நம் காதலை
உயிர்நாடியில் சுவாசித்து!!

Saturday, 14 June 2014

தந்தை!!

வார்த்தைகளால் கூற முடியாது 
நம் பெற்றோரின் நேசத்தை !
தாயின் பாசம் பலவாறு வெளிப்படும் !
ஆனால் தந்தையின் பாசம்
நம் பரிமாணங்களில் வெளிப்படும் !!


அளவான பேச்சும், 
ஆரவாரமில்ல அனுசரணையும் ,
இயல்பான நடத்தையும், 
ஈகைப் பண்பும்,
உரிமையுடன் உதவும், 
ஊராரை விமர்சிக்காமலும், 
எழுச்சிமிகு எண்ணங்களும் ,
ஏச்சுகளை பேசாமலும்,
ஐக்கியம் வளர்த்தலும்,
ஒவ்வாமை தவிர்த்தலும், 
ஒக்கமாய் வளர்தலும்,
ஔவியம் தவிர்க்கவும்,
அஃரினைகளையும் மதிக்கவும் ,
கற்றுத் தந்த 
கடவுளான என் தந்தைக்கு, 
"தந்தையர் தின வாழ்த்துக்கள்"

Thursday, 12 June 2014

குழந்தை தொழிலாளர்கள்!!


குழந்தையின் வருமானம் 
நாட்டுக்கு அவமானம் !(படித்ததில் பிடித்தது )
ஒரு பெண் குழந்தையின் 
ஆதங்கம் கீழே !!

என்  வரவை  எண்ணி 
நீ  காத்திருந்த   நேரங்கள் ,
என் முகம் பார்த்து 
நீ அழுத நிமிடங்கள்,
என் கரம் பிடித்து 
நீ கூட்டிச் சென்ற  நாட்கள் ,
என் மனம் முழுக்க 
நீ ஊட்டிய நம்பிக்கை ,
வறுமையிலும் ,
வசந்தத்தை காட்டினாய் !
வஞ்சனையில்லா அன்பினால்  
வாஞ்சை கொண்டேன் உன் மேல் !
சச்சரவில்லா வாழ்வில், 
நுழைந்தது விதி !
நீ வினையினால் படுத்த படுக்கையானாய் !
நானோ வீதியில் விளையாடாமல் ,
துணிகளை வெட்ட ஆரம்பித்தேன்,
வயதுக்கு வராமலே !


P.S:தவறு இருந்தால் கருத்துக்களில் பதிவு செய்யவும் !

Tuesday, 10 June 2014

போராட்டம் !

வாழ்க்கை வருபவர்களுக்கெல்லாம் வசந்தமல்ல !!
வறுமையில் வாழ்பவர்க்கு, 
நித்தம் ஒரு போராட்டம் 
ஒரு வேலைகஞ்சிக்கு  
எப்படி பணம் சேர்ப்பதென்று  ?
செல்வத்தில் திளைப்பவரகளுக்கும்  
போராட்டம் தான் 
எப்படி பாதுகாப்பது ? 
எப்படி பெருக்குவது ?
இருப்பவர்களுக்கு ஒரு கவலை !
இல்லாதவர்களுக்கு ஒரு கவலை !


போராட்டமான வாழ்க்கையில்
போராளிகளாகிய நாம் சந்திக்கும்
போராட்டங்கள் ஆயிரம்
போராளிகள் பல்லாயிரம்
போட்டியைக் கண்டு முடங்கிவிடாதே
போராடு போட்டி போடு
பொறாமை கொள்ளாதே!
பக்குவமாய் செயல்பாடு
பதற்றம் அடையாதே!
சிந்தித்து செயல்படு
சினங்கொண்டு எறியாதே !!
மனதாரப்  பாராட்டு
மனதில் வைத்து பேசாதே !!
இயன்றவரை உதவி செய்
இயலாதவரை கேலி செய்யாதே !!
ஊக்கத்துடன் முன்னேறு
ஊதாரியாகத்  திரியாதே!!!
எண்ணங்கள் பல
திண்ணத்துடன் செயல்படு
வருங்காலத்தை
கேள்விக்குறி ஆகாதே
வர்ணங்கள் நிறைந்த
வானவில்லாக மாற்று!!!!!




P.S: என் அலமாரியிலிருந்து !!

Thursday, 5 June 2014

சுற்றுச்சூழல்


உலக சுற்றுச்சூழல் தினத்திற்காக ,
தோன்றிய எண்ணங்கள் பல..
செயலாற்றுவது கடினம் ,
குறை கூறும் இவ்வுலகில் !
மாற்றங்கள் நம்மில் ஆரம்பிக்கட்டும் !


சுட்ட வெயிலின் அழுத்தத்தில் 
இளைப்பாற இடம் தேடினேன் 
சுற்றிலும் நெடு நெடுவென 
மரங்களா?
இல்லவே இல்லை !
காற்று கூட புகா
கட்டிடங்கள் தான் !!
சுவர் மட்டும் எழுப்பினால் போதுமா? 
சுவாசிக்க சந்திர மண்டலம் தான் போகவேண்டும் போல!
சமுதாயமே (என்னையும் சேர்த்து தான்)
நெகிழை (PLASTIC) ஒழித்துவிட்டு 
காகிதத்திற்கு வழிவிடுங்கள் !
வேகப்பத்தை(PIZZA) தவிர்த்துவிட்டு 
திணையை உண்ணுங்கள் !!
மகிழுந்தியை ஓரக்கட்டிவிட்டு 
மிதிவண்டியை ஓட்டுங்கள்!
செடிகள் நடுங்கள் !
சுற்றுப்புறத்தை பேணுங்கள் !

Tuesday, 3 June 2014

மனிதநேயம்

இக்கவிதையின் ஆரம்பம், தாம்பரம் ரயில்நிலையத்தில் ஆரம்பித்தது !வருடங்கள் உருண்டோடினாலும்,பசியால் துடித்த மூதாட்டியை மறக்க இயலவில்லை !பசியென்று கதறிய ஜீவனை,கண்ணெடுத்தும் பார்க்கவில்லை எவரும் !எந்த கடையும் அருகில் இல்லை !பசிவேதனை எனக்கும் தான்,தேநீரும் தேவர்மிதமாகும்,பசியின் கோரப்பிடியில் சிக்கியவர்களுக்கு !!அன்று தான் உணர்ந்தேன் !!குல்லாவும் (winter )ஒரு பிஸ்கட் கட்டும் கொடுத்து வந்தேன் !மனம் நிறையவில்லை !பாரத்துடன் திரும்பி வந்தேன் !கடவுளின் படைப்பை எண்ணி !மனிதனுக்கு இதயம் உண்டு ஆனால்இயந்திரமயமானவர்களுக்கு  எங்கே இதயம் உள்ளது????



சாலையோரத்தில்
கீழேகிடக்கும்
கற்களைக் கண்டாலே
ஒதுங்குபவர்கள் ,
கலங்கி நிற்கும்
வாழ்விழந்த ஜீவன்களையா ,
இல்லை!
வலுவிழந்த மனங்களையா
கண்டுகொள்வார்கள் !!
இல்லவே இல்லை !
மனிதநேயம்
மனிதருள் மரத்துவிட்டது
மற்புதிரில் மறைந்திருக்கும்
கற்கள் போல !